கடலூர் அரசு கலைக்கல்லூரியில் 120 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பு

கடலூர், ஜன. 9: தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 350 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா 2வது அலையின்போது கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 300 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு, சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 120 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று கல்லூரி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து, படுக்கைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 350 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. தற்போது நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 120 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: