பெண்ணிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ₹13 ஆயிரம் அபேஸ்

திட்டக்குடி, ஜன. 9:  திட்டக்குடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ஏடிஎம்மை திருடி பணம் எடுத்த வாலிபர் கைது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி நர்மதா (21). இவர் சம்பவத்தன்று திட்டக்குடி பெரியார் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்கச் சொல்லி ரகசிய எண்ணையும் கூறியுள்ளார். தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்த அந்த மர்மநபர் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு அதேபோல் வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.  சிறிது நேரத்தில் நர்மதா செல்போன் எண்ணிற்கு அவரது வங்கி கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நர்மதா தனது ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்தபோது அது போலி ஏடிஎம் கார்டு என தெரியவந்தது.

இதுகுறித்து நர்மதா திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அண்ணக்கொடி, சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெரியார் தெருவில் உள்ள முருகன் கோயில் அருகே இன்ஸ்பெக்டர் அண்ணக்கொடி, சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பிளாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தர்ராஜ் (29) என்பதும் இவர் திட்டக்குடியில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திட்டக்குடி போலீசார் சுந்தர்ராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.  

Related Stories: