போலி ஆவணங்களை காட்டி நிலம் வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ₹70 லட்சம் மோசடி

விழுப்புரம், ஜன. 9:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரியஅகரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர் அண்மையில் எஸ்பி நாதாவிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில், கடந்த 2006ம் ஆண்டு திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தைச் சேர்ந்த பாலு(58) என்பவர் எனக்கு அறிமுகமானார். தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், குறைந்த விலையில் இடம் வாங்கித் தருவதாகவும் கூறினார்.அதனடிப்படையில் அச்சரப்பாக்கம் அருகே விளவங்காடு கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், ஒரு ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும், பத்திரப்பதிவு ரூ.10 லட்சம்  என மொத்தம் ரூ.70 லட்சம் என்று கூறினார். அதனை நம்பி பல தவணைகளாக அவர் கேட்ட ரூ.70 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர் போலி ஆவணங்களை காண்பித்து நிலம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டார்.

பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்தார்.இது தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு நான் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்து பணத்தை பெற்றுத் தர வேண்டும், என கூறியிருந்தார்.இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி நாதா குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பாலுவை போலீசார் நேற்று கைது செய்து செஞ்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர்படுத்தி, விழுப்புரம் அருகே வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: