ஆர்டிஓ முன்னிலையில் 2 ரவுடி உடல்கள் பிரேத பரிசோதனை: 9 மணி நேரம் நடந்தது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் ஆர்டிஓ முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32). பிரபல ரவுடி. இவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 6ம் தேதி மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் 3 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்று அவரையும் சரமாரியாக வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், செங்கல்பட்டை சேர்ந்த பிஸ்கெட் (எ) மொய்தீன், தீனா (எ) தினேஷ், மாது (எ) மாதவன் ஆகியோர், கார்த்திக் மற்றும் மகேஷை கொலை செய்தது தெரிந்தது. மேலும் எஸ்பி அரவிந்தன், ஏஎஸ்பி ஆசிஸ் பச்சோரோ உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரவிக்குமார், வடிவேல்முருகன், ருக்மாங்கதன் ஆகியோர் கொண்ட 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தவேளையில், கொலையாளிகள் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், செங்கல்பட்டு மாதவன் (25), திருப்போர் ஜெசிகா (26) ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான தீனா (எ) தினேஷ், மொய்தீன் ஆகியோர் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்றபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி, பயங்கர ஆயுதங்களால் கொலையாளிகள் தாக்க முயன்றனர்.

உடனே போலீசார், சுதாரித்து கொண்டு அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர்கள் இறந்தனர்.இந்நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்ட தீனா, மொய்தீன் சடலங்களை உறவினர்கள் பெற முன் வராததால், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை, செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதா பர்வீன் முன்னிலையில் 2 உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவு செய்து, பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

நாட்டு வெடிகுண்டு தயாரித்த பெண்

ஜெசிகா, திருப்போரூரை சேர்ந்தவர். அவரது கணவன் அசோக், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் வல்லவர். மாவட்டத்தில் உள்ள ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரித்து வைக்கோல், தவுடு ஆகியவற்றில் வைத்து பாதுகாப்பாக கொடுப்பார். ஒருமுறை பிரபல ரவுடிகளுக்கு சப்ளை செய்வதற்காக பைக்கில் எடுத்து சென்றபோது, திருப்போரூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது மனைவி ெஜசிகா, செங்கல்பட்டு அடுத்த ரேடியோ மலையில் தங்கி, நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு வழங்கி வந்தார். இந்த சம்பவத்திலும் இவர், ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்துள்ளார். அவர்களுடன் தொடர்பிலும் இருந்துள்ளார். அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: