மதுராந்தகம் அருகே பாசஞ்சர் ரயில் திடீர் பழுது: நடுவழியில் பயணிகள் தவிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பாசஞ்சர் ரயில் சக்கரம் திடீரென பழுதானதால், சென்னைக்கு வரவேண்டிய பயணிகள் நடுவழியில் தவித்தனர். அவர்கள் மாற்று விரைவு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு நேற்று காலை பாசஞ்சர் ரயில் புறப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் வந்தபோது, திடீரென ரயில் சக்கரத்தில் பழுது ஏற்பட்டு, நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தகவலறிந்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பழுதை சீரமைத்தனர். இதற்கிடையில், அந்த ரயிலில் வந்த பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து, பாஞ்சர் ரயிலில் வந்த பயணிகள் அனைவரையும், அவ்வழியாக வந்த நிஜாமுதீன் விரைவு ரயிலில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சக்கரம் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர், அடுத்தடுத்து ரயில்கள் புறப்பட்டு சென்றன.

Related Stories: