கொரோனாவில் இருந்து மக்களை காக்க அனைத்து கடைக்காரர்களும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் அனைத்து சங்க நிர்வாகிகளுடன் கமிஷனர் பேச்சு

வேலூர், ஜன.8: கொரோனாவில் இருந்து மக்களை காக்க அனைத்து கடைக்கார்களும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் பேசினார். வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், வணிகர் சங்கத்தினர், மீன் வியாபாரிகள் உள்பட அனைத்து வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நேற்று முன்தினம் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் மணிவண்ணன், 1வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். முன்னதாக கமிஷனர் அசோக்குமார் பேசியதாவது:-

கொரோனா 3வது அலை தற்போது வந்துள்ளது. இதனை பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனாவை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை கைழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். ஊரடங்கு அறிவித்தால் பொதுமக்களையும் பாதிக்காமல், பொருளாதாரமும் பாதிக்காதபடி செயல்பட வேண்டும். வணிகர்கள் அனைத்து வகையிலும் அரசுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு வழங்கும் சேவையில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது. நமது சமுதாயத்தை நாம் காக்கவேண்டும். பொதுமக்களுக்கு நாம் உதவவேண்டும். இதற்கு கொரோனா பரவாமல் தடுக்கவேண்டும். இதற்காக மார்க்கெட்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதனை மாற்ற வேண்டிய சூழல் வந்தால் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: