திண்டுக்கல்லில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல், ஜன. 8:திண்டுக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரிபேக் உட்பட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.திண்டுக்கல்-பழநி ரோட்டில் அஜிஸ் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவருக்கு சொந்தமான கடையை ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். சுரேஷ்குமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், சில்வர் பேப்பர், டீ கப், தண்ணீர் கப், மெழுகு தடவிய டீ கப் பிளாஸ்டிக் கப் போன்றவற்றை தடையை மீறி விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவலறிந்த திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சுரேஷ்குமார் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கட்டிடத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் குடோனை வாடகைக்கு எடுத்த கடை உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு ரூ 50,000 அபராதம் விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: