பாதுகாப்பான உணவு தயாரிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், ஜன. 8:  உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வினீத் தலைமையில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள், ஓட்டல், உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனைத்து ஓட்டல், பேக்கரி, மளிகை மற்றும் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் உரிய வகையில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று இயங்க வேண்டும். பில்களில் உரிம எண் குறிப்பிட வேண்டும். தேங்காய் எண்ணெய்யில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சல்பர் பயன்படுத்தக்கூடாது.

சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் மீண்டும் பயன்படுத்த கூடாது. ஓட்டல்கள் சுகாதார மதிப்பீடு சான்று பெற வேண்டும். கோவில் அன்னதானம், பிரசாதம் தயாரிப்போர் ‘போக்’ திட்டத்தில் இணைய அறநிலையத்துறை வாயிலாக முயற்சிக்க வேண்டும். தள்ளுவண்டி மற்றும் ரோட்டோர உணவகங்களில் பணியாற்றுவோருக்கு உணவு தயாரிப்பு பாதுகாப்பு குறித்து அடிப்படை பயிற்சி அளிக்க வேண்டும். கடைகள், ஓட்டல்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உரிய வகையில் தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும், உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Related Stories: