×

கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் கோயில்கள் அடைப்பு

ஈரோடு,ஜன.8: கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்டம் முழுவதும் கோயில்கள் நேற்று முதல் அடைக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோயில்கள் முழுமையாக அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோயில், பண்ணாரி மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், சென்னிமலை முருகன் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன், பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் நேற்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த ஒரு சில பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை