1.31 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து.! ஜன.23ல் சிறப்பு முகாம்

நாகர்கோவில், ஜன. 8: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : இந்தியாவில் 1995-ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. ஜனவரி 2011 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 27.3.2014 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2016ம் ஆண்டு முதல் வாய் வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமாகவும் போலியோ மருந்து  வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம்  ஒரே கட்டமாக 23.1.2022 அன்று நடைபெற உள்ளது.  குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 1,31,401 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரம். ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி) பணியில் ஈடுபட உள்ளனர்.  இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 14ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதுணையோடு போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்புற நடைபெற உள்ளது. இந்த சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெற வேண்டும். இவ்வாறு கூறி  உள்ளார்.

ஊரடங்கு நாளில் முகாம் நடக்குமா?

தற்போது முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 23.1.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகும். தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு  முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே அந்த நாளில் முகாம் நடக்குமா? என அதிகாரிகளிடம் கேட்ட போது, ஏற்கனவே கடந்த மாதம் சென்னையில் இருந்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி 23.1.2022 அன்று முகாம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதுவரை முகாம் நடைபெறும் தேதி மாற்றப்பட வில்லை. ஒரு வேளை மாற்றப்பட்டால் வேறு தேதியில் முகாம் நடத்தப்படும் என்றனர்.

Related Stories: