இரு வாரங்களில் 5000 பேர் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு; மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்க உத்தரவு.!

நாகர்கோவில், ஜன.8 : குமரியில் இரு வாரங்களில் 5 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் அரவிந்த் கூறி உள்ளார்.  குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட வேண்டிய  மருத்துவ வசதிகள், சிகிச்சை வசதிகள் குறித்து கலெக்டர் அரவிந்த்  நேற்று ஆய்வு செய்தார்.  மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுக வேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள், கொரோனா நோய் சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர். மருத்துவமனையில் கொரோனாவுக்காக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை வார்டுகளை பார்வையிட்டார். மேலும் ஆக்சிஜன் இருப்பு விபரத்தையும், தற்போது தேவைப்படும் அளவு உள்ளிட்ட விபரங்களையும் கேட்டறிந்தார். மருத்துவக்கல்லூரியில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு வைத்து கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் கொரோனா சிகிச்சைகள் தொடர்பாக  டாக்டர்களுடன், கலெக்டர் அரவிந்த் ஆலோசனை நடத்தினார். மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் நடந்த இந்த  ஆலோசனை கூட்டத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது : குமரி மாவட்டத்தில் மூன்றாவது அலை தொற்று ஒரு வாரத்திற்கு முன் நாளொன்றுக்கு பத்து பேர்  என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது 100 ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பொறுத்தவரையில் மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருக்கிறது. இரண்டு வாரத்திற்குள் 5000 நபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படும் பட்சத்தில் 50 சதவீதம் படுக்கை வசதிகள் தேவைப்படும் சூழ்நிலை இருக்கிறது.  எனவே தேவையான படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 138 படுக்கை வசதிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளது.  

தற்போது 30 நோயாளிகள் உள்ளார்கள். மேலும், தனியார் மருத்துவமனைகளான ஜெயசேகரன் மருத்துவமனை, குலசேகரம் மூகாம்பிகா மருத்துவமனை, நெய்யூர் சி.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இதர மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள்  குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, கைகழுவும் திரவம் பயன்படுத்துவதோடு, சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா மூன்றாம் அலை அதிகளவில் பரவும் என்பதால் முதல் இரண்டு அலைகளில் அறிவுறுத்தப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

படுக்கைகள் எண்ணிக்கை 800 ஆகிறது

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குமரி மருத்துவக்கல்லூரியில்  கொரோனா சிகிச்சைக்காக 168 படுக்கைகள் இருந்தன. தற்போது கலெக்டர் உத்தரவின்படி 70 அதிகரிக்கப்பட்டு 238 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரம் 455 படுக்கைகளும், அதற்கு அடுத்த வாரம் இந்த எண்ணிக்கையை 800 ஆகவும் உயர்த்தவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவக்கல்லூரியில் 23 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிரப்பகம் உள்ளது. இது தவிர 1000 லிட்டர் நிமிடத்துக்கு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது. இன்னும் கூடுதலாக 500 லிட்டர் (நிமிடத்துக்கு) உற்பத்தி செய்யும்  மையத்துக்கான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை வேகமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார் என்றனர்.

கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியது

குமரி மாவட்டத்தில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 80, 90 என இருந்த பாதிப்பு நேற்று ஒரே நாளில் 100 ஐ தாண்டி உள்ளது. நேற்று முன் தினம் 3,479 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. நாகர்கோவில் மாநகராட்சியில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 14 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 5 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 13 பேர், மேல்புறம் ஒன்றியத்தில் 3 பேர், முஞ்சிறையில் 20 பேர், ராஜாக்கமங்கலத்தில் 5 பேர், திருவட்டாரில் 4 பேர், தோவாளையில் 3 பேர், தக்கலையில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 60,888 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: