சிக்கன் பீஸ் அதிகம் கேட்டு போராட்டம் கைதிகள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி, ஜன. 7: சிக்கன் பீஸ் அதிகம் கேட்டு போராட்டம் நடத்திய கைதிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மத்திய சிறைச்சாலை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நேற்று காலை மற்றும் மதிய உணவை வாங்க மறுத்து கைதிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிறை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது, 2019ம் ஆண்டுக்கு முன்பு வழங்கியது போல் கைதிகளுக்கு பீடி, சிகரெட் வழங்க அனுமதிக்க வேண்டும். வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவு மற்றும் தின்பண்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். உணவு வழங்கும்போது சிக்கனை அதிகமாக வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.அப்போதுதான் சாப்பிடுவோம் என அடம்பிடித்தனர்.

சிறை விதிகள் படிதான் நடக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்காமல் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறை மதில் சுவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒட்டுமொத்தமாக கைதிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டது. அப்போது ஒரு சில கைதிகள் தற்கொலை மிரட்டல் விடுத்து, ஆணியை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை எல்லை மீறி போனதால்,  இதுகுறித்து சிறை நிர்வாகம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது.  அதன்பேரில் கிழக்கு எஸ்பி தீபிகா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடி படை போலீசார் சிறையில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் கைதிகள் போலீசாரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இதனால் சிறப்பு அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது சுற்றி வளைத்து  தடியடி நடத்தினர். இதனால் கைதிகள் போராட்டத்தை கைவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். வேறு எங்கும் ஓடி, ஒளிய முடியாததால், தேடிப்பிடித்து நையப்புடைத்தனர். இதையடுத்து வழிக்கு வந்த அவர்களை, சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் எச்சரித்தனர்.

Related Stories: