முக கவசம் அணியாமல் சென்றால் நடவடிக்கை

கடலூர், ஜன. 6: தமிழகத்தில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தற்போது மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் கலந்து கொண்டு, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் ஒரு பகுதியாக கடலூரில் பிரதான சாலைகளில் சென்ற ஏராளமான பொது மக்கள் முக கவசம் அணியாமல் சென்றதை தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அனைவருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வருங்காலங்களில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். மேலும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு வரக்கூடிய பொது மக்களுக்கு கையில் கிருமி நாசினி தெளித்து, முகக் கவசம் இல்லாமல் வரக்கூடிய பொதுமக்களுக்கு உரிய முறையில் முக கவசம் வழங்கி சமூக இடைவெளியுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ஐயனார் மற்றும் போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர்.

Related Stories: