உளுந்தூர்பேட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து ₹3 லட்சம் நகை, பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை, ஜன. 5:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நெடுமானூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது. இதேபோன்று இதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் பணம் மற்றும் 2.5 பவுன் நகை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் மேற்கண்ட 2 பேரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா எய்யில் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (57). இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று வேலூரில் வசித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் இருக்குமென தெரிகிறது. நேற்று காலை பிரேமா வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவை திறந்திருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரேமாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரேமா அவலூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: