தோழி ஊருக்கு சென்றதால் இளம்பெண் தற்கொலை

ஓசூர், ஜன.3:ஜார்கண்ட் மாநிலம், துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரைச் சேர்ந்தவர் விகாஷ்குமார். இவரது மனைவி மஞ்சு(21). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விகாஷ்குமார் வேலை தேடி ஓசூர் பகுதிக்கு மனைவியுடன் வந்தார். ஓசூர் தாலுகா பாகலூர் அருகே, சிச்சிருகானப்பள்ளியில் இருவரும் தங்கி, அங்குள்ள ஒரு பேட்டரி கம்பெனியில் விகாஷ்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மஞ்சுவின் தோழி ஒருவர் ஜார்கண்டில் இருந்து சிச்சிருகானப்பள்ளிக்கு வந்து, கடந்த 2 வாரங்களாக மஞ்சுவுடன் தங்கி இருந்தார். பின்னர், அவர் ஜார்கண்டிற்கு சென்று விட்டார். தோழியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத மஞ்சு வேதனையடைந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சுவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: