அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, ஜன.3: அனுமன் ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். நாடு முழுவதும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுதர்ஷன ஹோமம் நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகள் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து சுதர்ஷன ஹோமமும், மங்களாரத்தியும் நடந்தது. ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், கிருஷ்ணகிரி கிருஷ்ணதேவராயர் மலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை வீர ஆஞ்சநேயருக்கு கலச அபிஷேகம் நடந்தது. பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயிலில் ஆஞ்நேயர் உற்சவர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல், ராசுவீதி அபய ஆஞ்சநேயர் கோயிலில், போகனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோயில், பர்கூர் மல்லப்பாடி வீர ஆஞ்சநேயர் கோயில், கே.ஆர்.பி. அணை ஆஞ்சநேயர் கோயில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சின்னகாரகுப்பம் ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சயே சுவாமி கோயில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

ஊத்தங்கரை: அனுமன் ஜெயந்தியையொட்டி, ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சுவாமிகளுக்கு 300 லிட்டர் பால், 150 இளநீர் மற்றும் பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கும், உற்சவருக்கும் பல்வேறு மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. மேலும், வடை மாலை, எலுமிச்சை மாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. விழாவில் ஊத்தங்கரை மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ராமர் லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

Related Stories: