நகரில் குற்றச்செயல்களை தடுக்க 41 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

தர்மபுரி, ஜன.3: தர்மபுரியில் குற்றச்செயல்கள் தடுக்க 41 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி.கலைச்செல்வன் நேற்று திறந்து வைத்தார். தர்மபுரி நகரில் புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையம் உள்ளது. நகரின் முக்கிய சாலைகளாக, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சின்னசாமிநாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, கடைவீதி, அப்துல்முஜீப்தெரு, முகமதுஅலி கிளப் சாலை, திருப்பத்தூர் மற்றும் பென்னாகரம் சாலைகள், கிருஷ்ணகிரி ரோடு, நான்கு ரோடு ரவுண்டனா, குமாரசாமிபேட்டை, எஸ்வி ரோடு உள்ளிட்டவை உள்ளன. நகரில் நான்குமுனை சாலை மற்றும் பெரியார் சிலை அருகிலும், சின்னசாமிநாயுடு தெரு, பேருந்து நிலையத்திலும் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை.

இதனால், நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முடியாமல், குற்றவாளிகளை பிடிக்க தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் 7 உண்டியல் உடைத்து, பணம் கொள்ளை போனது. அன்னசாகரத்தில் முருகன் கோயிலில் 20 கிலோ வெள்ளிபொருட்கள் கொள்ளை போனது. கொள்ளையர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, காவல்துறை சார்பில் 41 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களை கண்காணிக்க புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட எஸ்.பி. திறந்து வைத்தார்.

இதுகுறித்து எஸ்.பி.கலைசெல்வன் கூறுகையில், ‘கடந்த ஒரு மாத காலமாக பேருந்து நிலைய பகுதிகளில், தீவிரமாக கண்காணிக்க வாக்கி டாக்கியுடன் கூடிய “பீட் ஆபீசர் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி அமைத்துள்ள நவீன சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருக்கும். தற்போது பொருத்தப்பட்டுள்ள 41 சிசிடிவி கேமராக்கள், 41 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது போன்றது,’ என்றார். இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பி வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ், எஸ்ஐக்கள் சுந்தரமூர்த்தி, பெருமாள், சரவணன், அண்ணாதுரை, ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: