அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பேரையூர், ஜன.3: டி.கல்லுப்பட்டி,சேடபட்டி, அருகேயுள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கிராம தெய்வவழிபாடு உள்ளிட்ட யாக பூஜைகள் மற்றும் கும்பபூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால்,பழம், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சனம் உள்ளிட்ட 11 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது.

மகாதீபாராதணை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அனந்த சர்வமங்கள ஆஞ்சநேயராக பத்து கைகளுடன் காட்சியளித்தார். அதில் மதுரை, டி.கல்லுப்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழா முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், பூஜை ஏற்பாடுகளை கோவில்கமிட்டி அறிவழகன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் சேடபட்டி அருகே அல்லிகுண்டத்திலுள்ள கரியமால் அழகர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை மற்றும் விழா ஏற்பாடுகளை ஆசிரியர் சக்திவேல், அர்ச்சகர் ஆதிமூர்த்தி, உள்ளிட்ட கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: