தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பந்தலூர், ஜன.3: பந்தலூரில் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பந்தலூர் பஜாரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ உள்ளிட்ட தேயிலைத்தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. பிடபில்யூசி தொழிற்சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,‘‘தோட்டத்தொழிலாளர்களுக்கு தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபின் குறைந்தபட்சம் ஊதியம் ரூ.425 சம்பளம் வழங்குவதற்கு அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் சில தொழிற்சங்க நிர்வாகிகள் சில தோட்ட நிர்வாத்துடன் கைகோர்த்து அரசு அறிவித்துள்ள சம்பளத்திற்கு குறைவான ரூ.395 சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு கையெழுத்து போட்டுள்ளனர். இதுபோன்ற தொழிலாளர்கள் விரோதபோக்கை கண்டிக்கிறோம். அரசு அறிவித்துள்ள சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பேசினார். இதனை தொடர்ந்து ஐஎன்டியூசி மாநில பொதுச்செயலாளர் நல்லமுத்து கலந்துகொண்டு பேசும்போது,‘‘தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் தூக்கி எறியவேண்டும். தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து கோரிக்கைகளை வென்று எடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் தொழிற்சங்க நிர்வாகிகள் கணபதி, தமிழ்வாணன், சிஐடியூசி தொழிற்சங்க நிர்வாகி ரமேஷ், எஐடியூசி பெரியசாமி, முத்துக்குமார், ஐஎன்டியூசி லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், 500க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோத்தகிரி : அதேபோல், டேன் டீ தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு வரைவு ஆணையை அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த கோரி கோத்தகிரி மார்க்கெட் திடலில் பெனடிக்ட் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: