அரையாண்டு விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்கினர் பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசி, ஓவியம் வரைந்து அழகுபடுத்தி அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

சத்தியமங்கலம், ஜன. 3: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலைப்பகுதியில் மாணவ, மாணவியர் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி பெரிய குன்றி கிராமத்தில் இயங்கி வருகிறது. ஈரோடு கலெக்டரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பள்ளியில் தற்போது மலை கிராமங்களைச் சேர்ந்த 25  மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவாக இணைந்து பட்டாம்பூச்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி  காலாண்டு, அரையாண்டு, மற்றும் முழு ஆண்டு பள்ளி விடுமுறை காலங்களில் கிராமங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து அந்தப் பள்ளிகளின் சுவர்களை அழகுபடுத்தி ஓவியங்கள் வரைந்து சேவை செய்து வருகின்றனர்.

இந்த அரையாண்டு விடுமுறையில் பட்டாம்பூச்சி அமைப்பைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பெரிய குன்றி  கிராமத்திற்கு சென்று தேசிய குழந்தை தொழிலாளர்  பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கினர். பின்னர் அங்கு பள்ளியின் சுவர்களுக்கு வர்ணம் பூசி பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் பயன்படுத்தி கார்ட்டூன்கள், வனவிலங்குகள், காய்கறிகள், பழங்கள், ஆங்கில எழுத்துக்கள், மற்றும் அறிவியல் பாடங்களில் இடம் பெற்றுள்ள சதுரம், செவ்வகம், முக்கோணம்,  உள்ளிட்ட வடிவங்கள் மெய்யெழுத்து, உயிரெழுத்து உள்ளிட்ட தமிழ் எழுத்துக்கள் மற்றும் வாசகங்கள், மற்றும் கணித பாடம் சம்பந்தமான எண்களை பள்ளிகளில் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள் அனைத்திலும் அழகுற வரைந்துள்ளனர்.

 பள்ளி சுவர்களில் பாடம் குறித்த ஓவியங்கள் மற்றும் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் இங்கு பயிலும் மலை கிராம மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். பள்ளிகளில் வர்ணம் பூசுவதற்கும், ஓவியங்கள் வரைவதற்கும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பினர் பல்வேறு நிறங்களில் பெயிண்ட் இலவசமாக வாங்கி தந்து உதவியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பட்டாம்பூச்சி  என்ற அமைப்பை ஏற்படுத்தி பள்ளி விடுமுறை காலங்களில் அரசு பள்ளிகளின் சுவர்களை அழகாக்கி கல்வியை மேம்படுத்த உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்ணம் பூசுவதற்கான ஏற்பாடுகளை குழந்தை தொழிலாளர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் செய்திருந்தார். மலை கிராமத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பள்ளியை அழகு படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைகிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: