மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திருமுருகன்பூண்டி, ஜன. 1:  திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 4வது கட்டமாக நேற்று மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. இதன்படி முதல் நிகழ்ச்சியாக 1 வது மண்டலத்தில் 4 முதல் 5 வார்டு வரை உள்ள பகுதி பொதுமக்களிடம் மக்கள் குறை கேட்பு முகாம் நெருப்பெரிச்சல் கொங்கு கலையரங்கில் நடந்தது. முகாமிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தார்.  திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.  இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று  பேசியதாவது : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவியேற்று 200 நாட்கள் கடந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றினார். ஏழை, எளியோர், மகளிர், திருநங்கைகள், மாணவ, மாணவியர், முதியோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காலத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி போன்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து விரைவாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதன்தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கடந்த நவம்பரில் மண்டலம் 2,3,4க்கு உட்பட்ட வார்டுகளில் 2 கட்டமாக குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 3ம் கட்டமாக நேற்று முன்தினம் 1,2 வது மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து  இன்று (நேற்று) 1,2வது மண்டலத்தில் விடுபட்ட வார்டுகளில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  பொதுமக்களின் நலன் கருதி கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்படும் தகுதிவாய்ந்த மனுக்கள் மீதும், இதர மனுக்களுக்கு தீர்வு காணவும், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மூலம் அந்தந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

 இதனைத்தொடர்ந்து நடந்த பல்வேறு முகாம்களில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.  முகாமில் திமுக வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார், வடக்கு மாநகர இளைஞரணி பொறுப்பாளர் முத்துக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் ஜோதி, பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எஸ்.ராஜ், வடக்கு மாநகர பொறுப்புக்குழு கேபிள் ராஜ், வி.வி.ஜி.காந்தி, நிர்வாகிகள் தேவா, விவசாய அணி வேலுசாமி, இளைஞரணி குமார், அசோக்குமார், கிஷோர், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகசுந்தரம், நெருப்பெரிச்சல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலன், கொங்கு நகர் பகுதி செயலாளர் போலார் சம்பத் குமார், மாநகர பொறுப்புக்குழு கோபால்சாமி, 4 வது வார்டு சுரேஷ், 5 வது வார்டு பாபுசாமி, பிறகட்சிகளை சேர்ந்த  காங்கிரஸ் ராமசாமி, கொங்கு கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் சிகாமணி, இந்திய கம்யூனிஸ்ட் பூபதி உள்ளிட்டோர் மக்கள் வழங்கிய விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: