நாளை சிறப்பு தடுப்பூசி முகாம் 1 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

திருப்பூர், ஜன. 1: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :திருப்பூர்  மாவட்டத்தில் 17-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 18  லட்சத்து 47 ஆயிரத்து 861 பேருக்கு முதல் தவணையும், 12 லட்சத்து 5 ஆயிரத்து  165 பேருக்கு 2வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1  லட்சத்து 47 ஆயிரத்து 439 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 69 ஆயிரத்து  834 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது.  17&வது கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 17வது கட்ட தடுப்பூசி முகாம் 634 நிலையான  முகாம்களிலும், 41 நடமாடும் முகாம்களிலும் என மொத்தம் 675 மையங்களில் நாளை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் அரசு  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்,  ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில்  நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த  பணிக்காக துறை சார்ந்த 2,700 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட  உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: