பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் தொகையை ஆவின் நிறுவனம் உடனே வழங்க வேண்டும்

ஈரோடு,ஜன.1: மாதாந்திர வேளாண் குறைதீர் கூட்டம் ஈரோடுகலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகையில், “கீழ்பவானி வாய்க்காலில் உபரி நீர் வீணாகி வருவதைத் தடுக்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். முன்கூட்டியே தேவையான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட வேண்டும். உர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பவானி காடையாம்பட்டி பகுதியில் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நிலக் கந்தாயம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை  விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே உள்ள சாக்கு பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடப்பள்ளி அரக்கன் கோட்டைப் பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கிய புதிய ரக நெல்லில் பதர்கள் உருவாகி மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பர்கூர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி சிறு,குறு விவசாயிகள் அரசின் சலுகைகளைப் பெற ஏதுவாக நிலப்பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழுதடைந்துள்ள மலைப் பகுதி சாலைகளை சிரமைக்க உரிய நடவடிக்க மேற்கொள்ள வேண்டும். பழங்குடி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்டுள்ள பாலுக்கு ஆவின் பால் நிறுவனம் நிலுவைத் தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும்.

நாட்டுச் சர்க்கரையில் கலப்படம் செய்வதைத் தடுக்க வேண்டும். களைக்கொல்லி விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். முந்தைய கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதையடுத்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள்,மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி,  விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளர் சாவித்ரி, வேளாண் வணிக துணை இயக்குனர் சண்முக சுந்தரம் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: