தொழிலாளர் உதவி ஆணையர் 35 கடைகளில் திடீர் சோதனை 17 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு, ஜன. 1: ஈரோட்டில் கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் திடீர் ரெய்டு மேற்கொண்டு, எடைகளில் முறைகேடு மற்றும் பொட்டலப்பொருட்களில் விலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மீன் மார்க்கெட், இறைச்சிக்கடை, சந்தைகளில் எடையளவு சட்டம், பொட்டல பொருள் விதிகள் தொடர்பாக 35 கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, எடையளவு முத்திரையின்றி பயன்படுத்திய 8 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தனர். இதர வகையில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், பொட்டல பொருள் விதிப்படி சிகரெட் விற்பனை செய்யும் கடைகள், இதர நிறுவனங்கள் என 33 நிறுவனங்களில் ஆய்வு செய்து, சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஒரு நிறுவனம், பொட்டல பொருள் விதிகளின் கீழ் அறிவிப்பு இன்றி விற்பனை செய்த 6 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.

Related Stories: