கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோடு, ஜன.1: நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு உற்சாகமாக வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12.01 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். மேலும், ஈரோடு மாநகரில் பல்வேறு வீதிகளில் புத்தாண்டினை கொண்டாடும் விதமாக வண்ண காகித தோரணங்களை தொங்க விட்டும், சாலைகளில் ஹேப்பி நியூ இயர்-2022 என்ற வாசகங்கள் எழுதி வாழ்த்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.  

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், கோயிலின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர். நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. முக்கிய சந்திப்புகள், சாலைகளில் போலீசார் நள்ளிரவில் வாகன தணிக்கை மேற்கொண்டு விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் புத்தாண்டு கொண்டாட இளைஞர்கள் குவிவார்கள் என கருதப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் துறை சார்பில் மேம்பாலத்தின் அனைத்து வழிகளும் நேற்று இரவு 10 மணியளவில் அடைக்கப்பட்டு, எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை.

Related Stories: