ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த 322 திருட்டு வழக்கில் ரூ.1.59 கோடி பொருட்கள் மீட்பு

ஈரோடு, ஜன. 1: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த 322 கொள்ளை  சம்பவங்களில் ரூ.1.59 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு எஸ்பி சசி மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் 4 ஆதாய கொலைகள் உட்பட 40 கொலைகள் நடந்தது. கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொள்ளை, கூட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு, வாகன திருட்டு, கால்நடை திருட்டில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை கோபி, பவானி, கோபி, சத்தி ஆகிய 5 சப் டிவிசன்களிலும் 422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதில், 322 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 1 கோடியே 59 லட்சத்து 89ஆயிரத்து 768 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 5,142 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி விற்ற 315 பேரும், கஞ்சா விற்ற 218 பேரும், புகையிலை விற்ற 934 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 370 கிலோ கஞ்சா, இரண்டரை டன் குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மணல் திருட்டில் ஈடுபட்டதாக 43 பேர் கைது செய்யப்பட்டு, 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறியதாக 6.03 லட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 6 லட்சத்து 3ஆயிரத்து 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 320 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 25,222 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைத்ததில், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் 22 ஆயிரத்து 151 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 பழங்குற்றவாளிகள் உட்பட 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 138 குற்றவாளிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது 71 ஆயிரத்து 957 வழக்குகள், விதிமீறல்கள் தொடர்பாக 2 ஆயிரத்து 504 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 கோடியே 56 லட்சத்து 43 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த ஒரு எஸ்ஐ, ஒரு எஸ்எஸ்ஐ, தலைமைக்காவலர் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா தொற்று பரவல் மற்றும் புதிதாக வந்துள்ள ஒமைக்கரன் வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் காவல்துறையின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் தவறாது பின்பற்றிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: