அடுக்குமாடி கட்டிடம் இடிந்த சம்பவம் அரசு பொறியாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈஸ்வரன் எம்எல்ஏ அறிக்கை

திருச்செங்கோடு, டிச. 28: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து இருப்பது, இதுபோன்ற கட்டிடங்களில் வாழும் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. இரவு நேரத்தில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால், எத்தனையோ உயிர்களை பலிவாங்கி இருக்கும். தமிழகத்தில் எண்ணிக்கையில் அடங்கா அடுக்குமாடி கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பொறுப்பில்லாமல் கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்கிற பொறியாளர்கள் தான், இதற்கான பொறுப்பு. கடந்த 10 ஆண்டுகளாக இதை போன்ற கட்டிடங்கள் பொறுப்பில்லாமல் கட்டப்பட்டுள்ளன.

இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தை கட்டிய அரசு பொறியாளர்கள், ஆய்வு நடத்திய மேல் அதிகாரிகள் அனைவரும் இதற்கு பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் தப்பித்து விடக்கூடாது. இந்த விஷயத்தில் கடும்  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் வேகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஈஸ்வரன் எம்எல்ஏ  கூறியுள்ளார்.

Related Stories: