டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம் வேளாண் இணை இயக்குநர் தகவல்

கிருஷ்ணகிரி,டிச.28:  கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், டிஏபி உரத்திற்கு மாற்றாக குறைந்த விலையில் கிடைக்கும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பேரூட்ட சத்தான மணிச்சத்து 16 சதவீதம், 2ம் நிலை சத்துக்களான சல்பர் 11 சதவீதம் மற்றும் கால்சியம் 21 சதவீதம் உள்ளது.

உரம் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் டிஏபி உரத்தை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. இதில் உள்ள மணிச்சத்து நீரில் எளிதில் கரையும் தன்மை கொண்டதால், வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், அதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் வேர் வளர்ச்சி, மண் தன்மை மேம்படுத்துதல் மற்றும் பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் மூலம் அதிக மகசூல் கிடைக்க வழி வகை செய்கிறது. நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களுக்கு, சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம் மட்கிய தொழு உரத்துடன், சூப்பர் பாஸ்பேட் உரத்தினை கலந்து 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதனை அடியுரமாக பயிர் சாகுபடிக்கு முன் இடுவதனால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது. ஒரு மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தின் விலை ₹385 மட்டுமே. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தென்னை, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர் மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு, விலை குறைவான எளிதில் கிடைக்கக்கூடிய சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: