வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க கூடாது கலெக்டரிடம், எதிர்ப்பு இயக்கத்தினர் மனு

திருப்பூர், டிச. 28:  வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க கூடாது என சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் கலெக்டர் வினீத்திடம், மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: அவினாசி முதல் அவினாசிபாளையம் வரை திருப்பூர் மாநகர் வழியாக 32 கிலோ மீட்டர் நீளத்தில் 20 கிலோ மீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சிக்குள் செல்லும் சுங்க சாலை. 4 வழிச்சாலை என்ற பெயரில் நிறைய இடங்களில், இருவழி சாலை பாதையாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பூர் மாநகருக்குள் செல்லும், இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவோ, சேவை சாலையும் அமைக்காமல் எந்தவித நிலம் எடுப்பும் செய்யாமல் ஏற்கனவே இருந்த சாலையை முழுக்க, முழுக்க அரசின் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு அவினாசிபாளையம் கிராமம் வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, தற்போது சுங்கச்சாவடி திறப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய, நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது. எனவே வேலம்பட்டி அருகே அமைய உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கனரா வங்கியில் திருப்பூர் மாவட்டத்தில் 70 வணிக தொடர்பாளர்கள் வேலை செய்து வருகிறோம். மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கியின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திற்கு சென்று வழங்குவது எங்களது பணி ஆகும். எங்களை முதலில் பணியில் சேர்க்கும் போது, வங்கி நேரடியாக கிளை மேலாளர்கள் மூலமாக அந்த கிராமத்தில் உள்ளவர்களை இந்த பணிக்காக தேர்வு செய்தனர்.

எங்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய பணம் வழங்க அரசு ரூ.30 வங்கிக்கு வழங்குகிறது. இதில் ரூ.20 எங்களுக்கு வழங்க வேண்டும். இதுவரை வழங்காத நிலுவைத்தொகையும் சேர்த்து வழங்க வேண்டும். நீக்கப்பட்ட அடிப்படை ஊதியம் தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பரிவர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என மனுவில் கூறப்பட்டிருந்தது.

பல்லடம் அண்ணாநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், பல்லடம் அண்ணாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2019-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, தற்போது நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. உயர்நிலைப்பள்ளிக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வகுப்பறையின்றியும், கழிவறை இன்றியும் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளி கட்டிடத்தை விரைவாக கட்ட வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

இந்து மக்கள் கட்சி-தமிழகத்தினர் கொடுத்த மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அரசு பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகளால் பெட்ரோல் ஊற்றி எரித்துகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  

அவினாசி பூஞ்சை தாமரைக்குளம் ஆதாரம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம், அவரது மனைவி பூவாத்தாள் ஆகியோர் கொடுத்த மனு: எனது மகன் துரைசாமி. மகள் வசந்தாமணி. இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. எனது மகன் துரைசாமி திருமணத்துக்கு கடன் பெற்று திருமணம் நடத்தி வைத்தேன். அதற்கான அசல் மற்றும் வட்டி தொகை எதுவும் துரைசாமி செலுத்தவில்லை. வயது மூப்பு காரணமாக எனது மகன், மகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு சொந்தமான இடத்தை செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைத்துவிட்டேன்.

ஆனால் நான் எனது மகளுக்கு எழுதி கொடுத்ததை, மகன் தடுக்கிறான். எனது மருமகள் புலிப்பார் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக இருந்துகொண்டு, எனது நிலத்தில் சொத்தில் வில்லங்கம் உண்டு என பலகை வைக்கிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தனர்.

Related Stories: