பேருந்து நிலையத்தில் ஆர்டிஓ திடீர் ஆய்வு தனியார் பஸ்களில் பொருத்திய 20 ஏர்ஹாரன்கள் பறிமுதல்

நாமக்கல், டிச. 23: நாமக்கல் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்களில், பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியுள்ளதாக புகார்கள் சென்றது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, சரவணன் ஆகியோர், நேற்று நாமக்கல் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை செய்தனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது 70 பஸ்கள் பார்க்கப்பட்டன. அதில் 20 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து டிரைவர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் முருகன் கூறுகையில், ‘குறிப்பிட்ட அளவு ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் தான் பஸ்களில் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ்களில் அதிக ஒலி எழுப்புவதால் சாலைகளில் நடந்து செல்லும்  மக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் திடீரென பதட்டமடைந்து விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் பஸ் உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும்,’ என்றார்.

Related Stories: