குமாரபாளையம் நகராட்சியில் மளிகை, ஓட்டல் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு

குமாரபாளையம்,டிச.23:  குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகம் மற்றும் துணிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு பயன்பாட்டுக்கு வைத்திருந்த 70 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்தனர். கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹7,500 அபராதம் விதித்தனர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள், துணிக்கடை, டீக்கடை, பேக்கரி மற்றும் ஓட்டல் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாட்டு அதிகரித்து உள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இணைந்து, நகராட்சி பகுதியில் உள்ள 70 டீக்கடை, பேக்கரி, துணிக்கடை மற்றும் ஓட்டல்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் பயன்படுத்தவும், விற்பனைக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், கப்புகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹7,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலா கூறுகையில், ‘நகராட்சி பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக இலை, துணி பைகளை பயன்படுத்தலாம். விதிமீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும், கடைகளில் பயன்படுத்துவதை கண்டுபிடித்தால், பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டால், கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும்’ என்றார்.

Related Stories: