நூல்விலை உயர்வால் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்

திருச்செங்கோடு, டிச.9: விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பில், டெல்லியில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2 மாதங்களாக கட்டுப்பாடு இல்லாமலும், எதிர்பாராமலும் நடந்த நூல் விலை ஏற்றத்தின் காரணமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விசைத்தறியாளர்களும் செய்வதறியாது முடங்கி உள்ளனர். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் செய்த ஆயத்தஆடை மற்றும் இதர ஜவுளி பொருட்களை தயாரிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லாத  ஏற்றுமதியும், உள்நாட்டு தேவைகளை கவனத்தில் கொள்ளாமல் அனுமதிக்கப்படும் ஏற்றுமதியும், நூல் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட நூற்பாலைகளால் நூல் உற்பத்தி குறைந்ததும், இதற்கு காரணம். இந்நிலை தொடர்ந்தால், கோடிக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர், உடனடியாக அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகள், அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் நூல் விலை ஏற்றம் சம்பந்தமாக, ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்சனா ஜர்தோஷ், எம்பிக்கள் ஈரோடு கணேசமூர்த்தி, நாமக்கல் சின்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: