திருப்பூர் வஉசி நகரில் மழை நீரை அகற்றிக்கோரி பாஜ நூதன போராட்டம்

திருப்பூர், டிச. 9: திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்காளாக பெய்து வரும் கன மழையால் திருப்பூர் கொடிக்கம்பம் வஉசி நகர் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. 2 நாட்கள் ஆகியும் மழை நீர் வடியாததால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேங்கிய மழைநீரில் மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: