பு.புளியம்பட்டி அருகே குழாய் பதிக்கும் பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம், டிச.9:  புஞ்சை புளியம்பட்டி அருகே குழாய் பதிக்கும் பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலிபாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் கீழ் காவிலிபாளையம் குளத்திற்கு பைப்லைன் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று காவிலிபாளையம் அருகேயுள்ள தொட்டியனூர்  பிரிவு பகுதியில் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பவானிசாகர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பழனிச்சாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். அவர்கள் தொட்டியனூர் பிரிவிலிருந்து கொமரகவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள குட்டை வழியாக மாற்றுப்பாதையில் அமைத்து அதன் வழியாக காவிலிபாளையம் குளத்திற்கு செல்லும் வகையில் பைப் லைன்  அமைக்க வேண்டும் என்றனர்.

மேலும், தொட்டியனூர் பிரிவிலிருந்து நேராக காவிலிபாளையம் குளத்திற்கு பைப்லைன் பதிக்கும் பணியை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கூறி பணியை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் நம்பியூர் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைப்லைன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள், ‘‘கொமர கவுண்டன்பாளையம் குட்டை வழியாக பைப் லைன் அமைத்து தண்ணீர் நிரப்பினால் அப்பகுதியிலுள்ள நிலங்களும் பாசன வசதி பெறும் வாய்ப்பு உள்ளது. பைப் லைனை மாற்றுப்பாதையில் அமைத்து அங்கிருந்து காவிலிபாளையம் குளத்திற்கு செல்லும் வகையில் அமைத்தால் மேலும் கூடுதலாக விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்புள்ளது’’ என்று கூறினர். இது குறித்து உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், வருவாய்த் துறையினரும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, பைப் லைன் அமைக்கும் பணி தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: