உத்தமபாளையத்தில் பழுதான லாரியால் 10 மணிநேரம் டிராபிக்

தேவாரம், டிச.9: உத்தமபாளையத்தில் மாநில நெடுஞ்சாலை பள்ளத்தில் லாரி பழுதடைந்து நின்றதால் 10 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலை கனமழையால் பெரிய பள்ளங்களாகவும் குழிகளாகவும் மாறி வாகனங்களில் பயணிக்க தகுதியற்ற சாலைகளாக உள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்லாங்குழி சாலையில் மண்ணையும் கற்களையும் பள்ளத்தில் போட்டு மூடினர். கன மழையின் காரணமாக ஒரு சில மணி நேரங்களிலேயே இவை அனைத்தும் கரைந்து ஓடிவிட்டது. மேலும் மண்ணை அதிகமாக பள்ளத்தில் போட்டதால் காய்ந்த பின்பு சாலைகள் முழுவதும் தூசியாகி பொதுமக்களும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம்-தேரடியில் பழுதடைந்த சாலையின் மிகப்பெரிய பள்ளத்தில் லாரி சக்கரம் சிக்கி ஆக்ஸில் கட்டாகிவிட்டது. இதனால் லாரியை இயக்க முடியவில்லை. எனவே 10 மணி நேரமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதித்தனர். இதனை அடுத்து மதுரை, தேனி செல்லும் வாகனங்கள் உ.அம்மாபட்டி வழியேயும், கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் ராயப்பன் பட்டி வழியேயும் திருப்பிவிடப்பட்டன. ஆக்ஸில் கட் ஆன லாரியில் இருந்த செங்கல் லோடு 10 மணிநேரத்திற்கு பின்பு மாற்றப்பட்ட பின்பு உத்தமபாளையம் - தேரடி மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்து தொடங்கியது.

Related Stories: