தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி, டிச.9: தேனி மாவ ட்ட கலெக்டரின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாக கூட்ட அரங்கில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் ரூபன்சங்கர்ராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, தாட்கோ மேலாளர் வேணுசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசும்போது, தூய்மை பணியாளர்கள் கொரோனா நோய் தொற்று காலகட்டத்தினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில், உரிய உபகரணங்கள் அணிந்து பணி செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தூய்மைப்பணியாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடக்கூடாது.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் செப்டிக்டேங்க் சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு தொழில் தொடங்கிட அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வருகிற 19ம் தேதி கம்பத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இப்பயிற்சி முகாமில் தூய்மைப்பணியாளர்கள் தங்களின் குழந்தைகளை பங்கெடுக்கச் செய்து, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்திட வேண்டும் என பேசினார்.

Related Stories: