ஐயப்ப பக்தர்கள் வருகை எதிரொலி பழநியில் திடீர் விடுதிகளாகும் குடியிருப்புகள் அதிகாரிகள் கவனிப்பார்களா?

பழநி, டிச. 8:ஐயப்ப  பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், பழநியில் பல வீடுகள் விடுதிகளாக மாறி  வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை பழநி  கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சீசன், பொங்கல் பண்டிகை விடுமுறை காலம்,  தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை தினங்கள் போன்று தொடர்ச்சியாக  பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். தற்போது  ஐயப்ப பக்தர்கள் வருகையை பயன்படுத்தி பழநி அடிவார பகுதியில் உள்ள பல  வீடுகள் தற்போது விடுதிகளாக முகம்மாறி உள்ளன. சந்து பொந்துகளில் உள்ள  தங்களது இருப்பிடத்திற்கு பழநிக்கு வரும் பக்தர்களை புரோக்கர்கள் மூலம்  அழைத்து சென்று விடுகின்றனர். அங்கு போதிய வசதிகள் இருப்பதில்லை என்றும்,  வாடகைகள் சொல்வதொன்றும், வசூலிப்பது ஒன்றாகவும் இருப்பதாகவும் பல பக்தர்கள்  புகார் தெரிகின்றனர்.

இதுகுறித்து கோவையை சேர்ந்த ஐயப்ப பக்தர் மோகன்  கூறுகையில், ‘வழக்கமாக வரும் சுற்றுலா வாகன டிரைவர்களை இங்குள்ளவர்கள்  சரிசெய்து வைத்து கொள்கின்றனர். அவர்கள் எவ்வித அடிப்படை வசதியும்,  பாதுகாப்பும் இல்லாத இடத்திற்கு தங்க வைக்க அழைத்து செல்கின்றனர். அங்கு  வாடகை சொல்வதொன்றும், வசூலிப்பது ஒன்றாகவும் இருக்கிறது. தவிர,  சுடுதண்ணீருக்கு ஒரு தொகை, மின்விசிறிக்கு ஒரு தொகை, கழிப்பறைக்கு ஒரு தொகை  என மிரட்டி வசூலித்து ஏமாற்றுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  களஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்டு வரும் லாட்ஜ்களின் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

More