ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்

காரைக்குடி, டிச.8:  காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்கில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் வாக்கு பெட்டி பாதுகாப்பு அறை அமைய உள்ளதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காரைக்குடி நகராட்சி மற்றும் கோட்டையூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் பாதுகாப்பு மையம் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.     

நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 97 வாக்குச்சாவடி மையங்கள் மூலம் 91 ஆயிரத்து 691 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதற்கேற்ப வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள் என்றார். பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, நகராட்சி ஆணையர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் மாலதி, வட்டாட்சியர் மாணிக்கவாசகம், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கவிதா, உமாமகேஸ்வரன், ரமேஷ்பாபு, பெலிக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: