சேறும் சகதியுமானதால் மக்கள் கடும் அவதி சாலையில் மரக்கன்று நட்டு மா.கம்யூ., கட்சியினர் போராட்டம்

திருமுருகன்பூண்டி, டிச. 8:  சேறும் சதியுமாக மாறிய சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் நேற்று மரக்கன்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், நெருப்பெரிச்சல், தோட்டத்துபாளையம்  பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி சாலைகள்  குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் இருக்கிறது. அவ்வப்போது போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம்  மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த சாலையில் பலர் இரு சக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் பழுதான அனைத்து சாலைகளை செப்பனிடவும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் நேற்று மரக்கன்று நடப்பட்டு போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தோட்டத்துபாளையம் மாதர் கிளைச் செயலாளர் மங்கலட்சுமி தலைமை தாங்கினார்.  மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் மைதிலி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி ஆகியோர் பேசினர். மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.  இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், இளங்கோ, முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில்  ஒன்றிய குழு உறுப்பினர் பானுமதி நன்றி கூறினார்.

Related Stories:

More