பருத்தி விலை குறைவுக்கு ஏற்ப நூல் விலையை குறைக்க வேண்டும்

திருப்பூர், டிச. 8:  ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (ஏ.இ.பி.சி.) அகில இந்திய தலைவர் சக்திவேல், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைவர் அப்புகுட்டி, தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் ரவிசாம் ஆகியோருக்கு  அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. நூல் விலையில் உள்ள உறுதியற்ற தன்மையினால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையினர் தற்போதைய ஆர்டர்களை முடிக்க முடியாமலும், எதிர்கால ஆர்டர்களை உறுதிபடுத்த முடியாமலும் உள்ளனர்.

பருத்தி மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களிடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.

இந்நிலையில் நடப்பு மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பருத்தியின் விலை தற்போது கேண்டி ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.4 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளது. பருத்தி விலை குறைப்புக்கு இணையாக நூல் விலை குறைப்பு இல்லை. பருத்தி விலையை விட நூல் விலை உயர்வு விகிதம் அதிகமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். எனவே பருத்தி விலை குறைப்புக்கு ஏற்ப நூல் விலையை குறைக்க வேண்டும். நியாயமான வர்த்தகம் மற்றும் வெளிப்படை தன்மையை நாங்கள் விரும்புகிறோம். எனவே கடந்த நவம்பர் மாதம் உயர்த்தப்பட்ட விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வருகிற பருவத்திற்கான ஆர்டர்களை முன்பதிவு செய்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமாருக்கும் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் நூல் விலை பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: