பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் கன்டெய்னர் கட்டண உயர்வை குறைக்க ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், டிச. 8:  பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் கன்டெய்னர்களின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து கன்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன.  இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக கன்டெய்னர்கள் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டது. இதனால் கன்டெய்னர்கள் கட்டணமும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வினால் திருப்பூரில் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

 இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கன்டெய்னர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையினால் பின்னலாடைகள் குறித்து நேரத்திற்கு வர்த்தகர்களுக்கு சென்று சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இதுபோல் கன்டெய்னர்கள் பற்றாக்குறையின் காரணமாக அதன் கட்டணமும் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக திருப்பூர் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் கன்டெய்னர்கள் பற்றாக்குறைக்கு அரசு தீர்வு கண்டு, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து ஏற்றுமதி வர்த்தகம் சிரமம் இன்றி நடைபெற உதவ வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: