சின்னசேலம் அருகே வாலிபர் மர்ம சாவில் நியாயமான விசாரணை கோரி சாலை மறியல்

சின்னசேலம், டிச. 7: சின்னசேலம் அருகே மக்காச்சோள வயலில் இறந்து கிடந்த வாலிபரின் சாவுக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் கடலூர்-சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

சின்னசேலம் அருகே கீழ்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (32). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு மோனிஷா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. கோவிந்தன் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவர் வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா பிரச்னையால் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கீழ்குப்பம் ஆற்றங்கரையோரம் முனியப்பர் கோயிலுக்கு அருகில் மக்காச்சோள வயலில் கோவிந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை மற்றும் கால்களில் தீக்காயம் இருந்தது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தன் மின் விபத்தில் இறந்ததாக தகவல், அந்த ஊரில் வதந்தியாக பரவியது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடி நேற்று காலை கீழ்குப்பம் பஸ் நிறுத்தத்தில் சேலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கோவிந்தனின் சாவில் போலீசார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: