(செய்திஎண்01) ₹5 கோடி மோசடி வழக்கில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் அதிக வட்டி ஆசை காட்டி வசூல்

வேலூர், டிச.8: அதிக வட்டி தருவதாக கூறி 3 பெண்களிடம் ₹5 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி விவேகானந்தர் நகரை சேர்ந்த ஜான்சிராணி, வேலூர் தொரப்பாடியை சேர்ந்த மலர்கொடி, கொசப்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மகேஸ்வரி(53), அவரது கணவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ தர்மலிங்கம், தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லதா ஆகியோர் ₹5 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பணத்தை இழந்த 3 பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2ம் தேதி கொணவட்டம் பள்ளி ஆசிரியை மகேஸ்வரியை கைது செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, அரசுப்பணியாளர் நன்னடத்தை விதியின் அடிப்படையில் ஆசிரியை மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Related Stories: