லேப்டாப், ஆவணங்கள் திருடிய 4 சிறுவர்கள் கைது கஞ்சா போதையில் போலீசாரிடம் சிக்கினர் காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில்

வேலூர், டிச.8: வேலூர் காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலக கதவை உடைத்து லேப்டாப்கள், ஆவணங்கள், கேமரா உள்ளிட்டவற்றை திருடிய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் காவலர் வீட்டு வசதி வாரியத்தின் வேலூர் உதவி கோட்ட அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை மீண்டும் பணிக்கு வந்தபோது அலுவலக கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு லேப்டாப்கள், கேமரா, பிரிண்டர், ஆவணங்கள் மற்றும் ஸ்டவ் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

இதுதொடர்பாக உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார் அளித்த புகாரின்பேரில் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டில் ஈடுபட்டது கோட்டை சுற்றுச்சாலை பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள 3 சிறுவர்கள், 16 வயதான சிறுவன் என 4 பேர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் வேலூர் கோட்டையில் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது கஞ்சா போதையில் படுத்துக் கொண்டிருந்த 4 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் வீட்டு வசதி வாரிய உபகோட்ட அலுவலகத்தில் லேப்டாப்கள், கேமரா, ஸ்டவ் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் லேப்டாப்கள், கேமரா, ஸ்டவ், ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக பிடிபட்ட சிறுவர்கள் 4 பேரிடமும் வடக்கு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: