(செய்திஎண்07) நூறு நாள் திட்ட பணியாளர்களுக்கு மொபைல் ஆப்பில் வருகை பதிவேடு முறைகேடுகளை தடுக்க நடவடிக்ைக தமிழகத்தில் இந்த மாதம் முதல் நடைமுறை

வேலூர், டிச.8: தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க இந்த மாதம் முதல் நூறு நாள் திட்ட பணியாளர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வருகை பதிவேடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற மக்களுக்கு ஊதியத்துடன் 100 நாட்களுக்குக் வேலை வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

குறிப்பாக தேசிய வேலை உறுதி திட்டத்தில், மண் வேலைகளுடன், கட்டுமான பணி, தார்ரோடு உள்ளிட்ட பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அடிப்படை விவசாய பணிகளும், இணைக்கப்பட்டுள்ளது. நுாறு நாள் திட்ட பணியாளரை கொண்டு, பதிவு செய்துள்ள விவசாயி, தங்களது நிலத்தில், பாத்திகட்டுவது, மண் வரப்பு அமைப்பது போன்ற பணிகளை செய்யலாம். தற்போதைய நிலவரப்படி ₹273 ரூபாய் தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டில், ஒரு நபருக்கு மட்டும், 26,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பணித்தள பொறுப்பாளர் தினமும் கணக்கெடுப்பு நடத்தி, தொழிலாளர் வருகையை உறுதி செய்கின்றனர். பீடிஓ அலுவலகத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் வேலைக்கு வராத பணியாளரின் சம்பளம் பங்கிடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுமட்டுமில்லாமல், திட்ட நிதியில் கட்டுமான பணிகள் நடக்கும் போது நூறு நாள் திட்ட பணியாளர் கணக்கில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர் பணிகளை செய்த பிறகு, தொழிலாளர் கணக்கில் விடுவிக்கப்பட்ட சம்பள தொகையை வாங்கி, ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளால், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. மேலும் விவசாய நிலங்களில் பணி நடக்கும் போது விவசாயிகள் கணக்கில் விடுவிக்கப்பட்ட சம்பள தொகையை கேட்டு வாங்கி கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 100 நாள் திட்ட பணியாளர்களின் வருகை பதிவேடு மொபைல் ஆப் மூலம் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறை இந்த மாதம் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 100 நாள் திட்ட வேலையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது என்எம்எம்எஸ் என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் பணியாளர்களின் வருகை பதிவேடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. காலை மற்றும் மாலை என இருவேளைகளில் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பணி தள பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு அதுகுறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பதிவு செய்யப்படும் பதிவுகள் நேரடியாக சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்றுவிடும். அதேபோல் அடுத்த வாரம் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் விவரமும் இந்த வாரமும் இந்த ஆப் மூலம் பதிவு செய்யப்படும். இதன் மூலம் 100 நாள் திட்ட பணியாளர்கள் கட் செய்துவிட்டு வெளியே செல்ல முடியாது. மேலும் பணிக்கு வராமல் பதிவு செய்ய முடியாது. இந்த திட்டத்தில் மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: