ஆரணியில் சுற்றித்திரிந்த கழுதைகள் இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கடத்தல் வேலூரில் வேனை விரட்டி மடக்கி போலீசார் அதிரடி கொரோனா குணமாவதாக கிலோ ₹1,500க்கு விற்பனை

வேலூர், டிச.8: கொரோனா குணமாவதாக ஆந்திராவில் கழுதை இறைச்சி ₹1,500க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆரணியில் சுற்றித்திரிந்த கழுதைகள் ஆந்திராவுக்கு வேனில் கடத்தப்பட்டது. இந்நிலையில் வேலூரில் போலீசார் வேனை விரட்டி மடக்கினர்.வேலூர் ஆரணி சாலை-அண்ணா சாலை சந்திப்பில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வேலூர் தெற்கு போலீஸ் எஸ்ஐ எழில் மற்றும் போலீசார் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் போலீசாரை கண்டதும் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், வேனை விரட்டிச் சென்று மக்கான் சிக்னல் அருகில் மடக்கி பிடித்தனர். வேனில் இருந்து இறங்கிய 4 பேர் தப்பி ஓடினர்.

வேன் டிரைவர் சீனிவாசாலால் மட்டும் போலீசில் சிக்கினார். வேதனை சோதனையிட்ட போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் 6 கழுதைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், பிடிபட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தில் கழுதைகளை திருடிச்சென்று அதன் இறைச்சியை ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் இரவும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம், ஆரணி பாளையம் பகுதிகளில் சுற்றித்திரிந்த கழுதைகளை திருடி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சீராளாவுக்கு வேனில் கடத்தியதும் தெரிய வந்தது.

இதுபற்றி தகவலறிந்த கழுதைகளின் உரிமையாளர்களான ஆரணி கொசப்பாளையம், ஆரணி பாளையம் பகுதிகளை சேர்ந்த மேகநாதன், தனசேகரன், தேவராஜ், பாண்டியன் ஆகியோர் வேலூர் விரைந்து வந்து தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கழுதை இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா குணமாவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கடந்த ஓராண்டாக தகவல் பரவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் கழுதை இறைச்சி கிலோ ₹1,500க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் கழுதை இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது.

Related Stories: