பிரமாண்டமான தேசிய கொடிகளை கையில் ஏந்தினர் கம்மவான்பேட்டையில் கொடிநாள்

கண்ணமங்கலம், டிச.8: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்ைடயில் நேற்று கொடி நாளையொட்டி முப்படை வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இளைஞர்கள் பிரமாண்டமான தேசிய கொடிகளை கையில் ஏந்தினர். இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அதிக ராணுவ வீரர்கள் வசிக்கும் கிராமமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை இருக்கிறது. இங்கு ராணுவத்தில் நடைபெறுவது போலவே நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி கொடி நாளான நேற்று கிராமத்தின் மையத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி இளைஞர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அருகில் உள்ள சக்தி மலையின் உச்சிக்கு இளைஞர்கள் சென்றனர். அங்கு முன்னாள் ராணுவ வீரர் எல்.ஏழுமலை தலைமையில் 30 அடி அகலம், 20 அடி உயரம் கொண்ட இரண்டு பிரமாண்டமான தேசிய கொடிகளை பிடித்தபடி போரில் வீரமரணமடைந்த முப்படை வீரர்களுக்கு வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தினார்கள்.

அப்போது, எல்.ஏழுமலை பேசுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்கின்றன. தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது’ என்றார். நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: