நசரத்பேட்டையில் 2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அதிமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பூந்தமல்லி: நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில்  இருளர் குட்டை என்ற குளம் பல ஆண்டுகளாக உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த குட்டையை சுற்றியுள்ள இடத்தில் கடைகள், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. நீர் நிலை பகுதியான  இந்த இடத்தை மீட்க வேண்டும் என நசரத்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா பொன்முருகன் சார்பில் வருவாய்த் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன்படி வருவாய் துறை அதிகாரிகள்  இருளர் குட்டையை ஆய்வு செய்ததில் சுமார் 40 சென்ட் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை எடுக்காததால் பூந்தமல்லி தாசில்தார் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில்  வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு வீடு, 11 கடைகளை 3 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த  அதிமுகவினர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அகற்றக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து விட்டு சென்றனர்.  மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தின் மதிப்பு ₹2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: