ஆவடி மாநகராட்சியில் 675 ஊழியர்களுடன் தூய்மை பணி 25 டன் குப்பை கழிவுகள் அகற்றம்: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் 675 தூய்மை பணியாளர்களுடன் தீவிர தூய்மை பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். இந்த பணியின்போது, 25 டன் எடையுள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு சார்பில், நோய் பரவும் சூழ்நிலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு திடக்கழிவுகளை அகற்றவும், கொசு உற்பத்திக்கு ஏதுவான காரணங்களை கண்டறிந்து அழிக்கவும், பட்டாபிராம் பகுதியில் 39, 44, 45 ஆகிய வார்டுகளில் ஒட்டுமொத்த தீவிர கூட்டு தூய்மை பணி நேற்று காலை முதல் மதியம் வரை மேற்கொள்ளப்பட்டது.  இதனை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

இப்பணியில் 675 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து பரப்புரையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்கள், கொசு மருந்து பணியாளர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த தீவிர தூய்மை பணியில் தெருக்களில் உள்ள அனைத்து விதமான கழிவுகளும் வாகனங்களில் அப்புறப்படுத்தப்பட்டு சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும், அனைத்து காலி மனைகளில் உள்ள திடக்கழிவுகளை அகற்றியதோடு, பிளாஸ்டிக் மற்றும் மரக்கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டது. மேலும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. தெரு ஓரங்களில் உள்ள அனைத்து செடி, கொடிகளும் வெட்டி அகற்றப்பட்டது. அனைத்து குடியிருப்புகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகி உள்ள ஆட்டு உரல், சிரட்டை, டயர் உள்ளிட்ட உபயோகமற்ற பொருட்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு இயந்திரம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவைகள் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த தீவிர தூய்மை பணியின்போது, சுமார் 25 டன் எடையுள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியின்போது மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் அப்துல்ஜாபர், சுகாதார ஆய்வாளர் நாகராஜ், ரவிச்சந்திரன், பிரகாஷ், பிரகாஷ், சிவகுமார் மற்றும் மாநகராட்சி, தனியார் துப்புரவு மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More