வாலாஜாபாத் ஒழையூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் பஸ் பயணிகள் நிழற்குடை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சியில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில்  800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில்,  ஒழையூர் - தென்னேரி சாலை பிரதான சாலையாக உள்ளது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக, பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை, தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரை முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனை அகற்றிவிட்டு, புதிதாக பஸ் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சி பேருந்து நிழற்குடை தற்போது சிதலமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. வேலை, பள்ளி, கல்லூரி, வியாபாரம் என பல்வேறு பணிகளுக்காக செல்வோரும், மருத்துவமனை உள்பட பல அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், இந்த பஸ் நிறுத்தததில் காத்திருந்து காஞ்சிபுரம் செல்வார்கள். மழை மற்றும் வெயில் நேரத்தில், இந்த நிழற்குடையை பயன்படுத்தும் மக்கள், மேற்கூரை பழுதடைந்துள்ளதால், கடும் அச்சமடைந்துள்ளனர். திடீரென இடிந்து விழுந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள், இங்குள்ள பஸ் பயணிகள் நிழற்குடையை அகற்றி, புதியதாக கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More